தஞ்சோங் மாலிம் அருகே 3 லோரிகள் மோதி கோர விபத்து: 24 வயது இளைஞர் பலி; மூவர் படுகாயம்!

தஞ்சோங் மாலிம் | மார்ச் 04, 2026:

வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 378-வது கிலோமீட்டரில் (வடக்கு நோக்கிய திசை) நேற்று மாலை நிகழ்ந்த மூன்று லோரிகள் மோதிய விபத்தில் 24 வயது லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 3:57 மணியளவில் விபத்து குறித்த அவசர அழைப்பு வரப்பெற்றது. சிலிம் ரிவர் மற்றும் தஞ்சோங் மாலிம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி சபரோட்ஸி நூர் அகமாட் தெரிவித்தார்.

இந்த விபத்தில் அரிசி ஏற்றிச் சென்ற 3 டன் இசுசூ (Isuzu) லோரி, இரும்புச் சுருள்களை (Steel coils) ஏற்றிச் சென்ற வோல்வோ (Volvo) டிரெய்லர் மற்றும் பழைய பொருட்களை ஏற்றிச் சென்ற நிசான் யுடி (Nissan UD) லோரி ஆகிய மூன்று கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

விபத்தில் சிக்கிய இசுசூ லோரியின் ஓட்டுநர் (24 வயது) பலத்த காயங்களுடன் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். தீயணைப்பு வீரர்கள் SAVER (Systematic Approach for Victim Extrication and Rescue) எனும் நவீன மீட்பு முறையைப் பயன்படுத்தி, ஹைட்ராலிக் கருவிகள் மூலம் அவரை மீட்டனர்.

இருப்பினும், சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார அமைச்சக அதிகாரிகள் அந்த இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

பலியான இளைஞருடன் இசுசூ லோரியில் பயணித்த 64 வயது முதியவர் மற்றும் மற்ற இரு லோரிகளின் ஓட்டுநர்கள் (49 வயது மதிக்கத்தக்கவர்கள்) படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் உடல் மேலதிக விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here