புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை அருகே ஒன்றுகூடத் தடை; சர்ச்சைக்குரிய போராட்டம் ரத்து!

புக்கிட் மெர்தாஜாம் | மார்ச் 06, 2026:

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்து ஆலயத்தின் அருகே நாளை (மார்ச் 7) நடைபெறவிருந்த “Operasi Terjahan Rumah Anutan Haram” என்ற போராட்டம், காவல்துறையினரின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

செபெராங் பிறை மத்திய மாவட்டக் காவல்துறைத் தலைவர் தலைமையில், போராட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டியதைத் தொடர்ந்து, நாளை மதியம் 3 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த அந்தப் போராட்டம் நடைபெறாது என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, பினாங்கு மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் (Datuk Azizee Ismail) கூறினார்.

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ‘ஸ்ரீ தேவி முனீஸ்வரர்’ ஆலயம் இடிக்கப்படப் போவதாகச் சமூக வலைதளங்களில் பரவிய தகவலைத் தொடர்ந்து, பினாங்கு ‘Surplus’ நலச்சங்கத்தின் தலைவர் சோபியான் முகமட் சைன் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மருத்துவமனை என்பது பொதுமக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மிக முக்கியமான இடம் என்பதால், அங்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்:

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளை இதே பகுதியில் நடைபெறவுள்ள மற்றொரு சமய ஊர்வலத்தின் போது போக்குவரத்து விதிகளையும், போலீசாரின் உத்தரவுகளையும் பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் அமைதியை நிலைநாட்டக் காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் கூறினார்.

இந்நிலையில் ஆலயத் தலைவர் எம். கார்த்திகேசன் மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் இருவரும் அமைதியைப் பேண ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here