பலூன் விற்பனையாளர்களுக்கு இனி உரிமம் கட்டாயம்; கூட்டரசு பிரதேம் அதிரடி அறிவிப்பு!

கோலாலம்பூர் | மார்ச் 08, 2026:

கோலாலம்பூரின் மிகவும் பரபரப்பான ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் (Jalan TAR) பகுதியில் பலூன் விற்பனை செய்பவர்கள், இனி முறையாக வணிக உரிமம் (Licence) பெற்றிருக்க வேண்டும் என்று கூட்டரசு பிரதேசத் துறை (JWP) இன்று அறிவித்துள்ளது.

ரமலான் மாதத்தில் ஜாலான் TAR பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், வணிக நடவடிக்கைகளை முறையான சட்டப்படியும், ஒழுங்காகவும் அமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, கூட்டரசு பிரதேசத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், தற்போது அங்கு செயல்படும் பலூன் விற்பனையாளர்கள் முறையான உரிமங்களைப் பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, வணிகச் சூழலும் சீராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜாலான் TAR பகுதியில் பலூன் விற்பனையாளர்களுக்கும், DBKL அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, தற்போது முறையான உரிமம் இருந்தால் மட்டுமே பலூன் விற்க அனுமதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜாலான் TAR போன்ற பிரபலமான இடங்களில் வணிக நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் நடப்பதை உறுதி செய்ய DBKL தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here