கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்து நலம் விசாரித்ததோடு தேசிய விவகாரங் கள் குறித்து அவருக்கு விளக்க மளித்தார். அன்வார் தற்போது பஹ்ரெய்னுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருக்கிறார். நாட்டு நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு வாய்ப்பளித்த பேரரசருக்கு தாம் நன்றி. சொல்வதாக தம்முடைய ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதேசமயத்தில் அண்மையில் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றிருந்த பேரரசரின் உடல்நலம் குறித்தும் விசாரித்ததாகச் சொன்னார்.
சுல்தான் இப்ராஹிம் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருந்து நாட்டை வழி நடத்துவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். பஹ்ரெய்ன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான ஷேக் சல்மான் ஹமாட் அல் – கலிஃபா அழைப்பின் பேரில் அன்வார் அந்நாட்டிற்குத் தம்முடைய அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
மாட்சிமை தங்கிய பேரரசரைப் பிரதமர் அங்குதான் சந்தித்துப் பேசினார். இந்த வருகையின்போது தற்போது ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் மலேசியா வின் திட்டங்கள், வட்டார, உலகளாவிய விவகாரங்கள், மலேசியாவின் வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவை குறித்து பஹ்ரெய்ன் பிரதமருக்கு அன்வார் விளக்கமளித்தார் என்று பஹ்ரெய்னுக்கான மலேசியத் தூதர் ஷாரில் ஷஹிரான் கூறினார். மேலும் இந்த வருகையின்போது மலேசியா- பஹ்ரெய்ன் இடையிலான இருவழி உறவுகளை வலுப்படுத்துவதற்கு உயர்மட்ட விவாதங்களில் அன்வார் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















