ஜாலான் துன் ரசாக்: கார் தீப்பற்றி எரிந்து விபத்து; 20 வயது பெண் ஓட்டுநருக்கு 70% தீக்காயம்!

கோலாலம்பூர் | மார்ச் 12, 2026 :

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் உள்ள ‘The Avenue Club’ அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த வாகன விபத்தில், இளம்பெண் ஒருவர் 70 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அதிகாலை சுமார் 5:21 மணியளவில் விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்துள்ளது. இந்த விபத்தில் 20 வயது பெண் ஓட்டுநர் பயணித்த பியூஜியோ (Peugeot) காரும், இருவர் பயணித்த டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) வாகனமும் மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் பியூஜியோ கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அந்த கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகி இருந்தது.

காரை ஓட்டிச் சென்ற 20 வயது பெண்ணிற்கு உடலில் சுமார் 70 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே அங்கிருந்த பொதுமக்களால் அவர் காரில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.

டொயோட்டா வெல்ஃபையர் வாகனத்தில் இருந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்திலிருந்து 8 வீரர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here