துவாரன் காட்டுத்தீயால் பயங்கரம்; கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 700 வாகனங்கள் தீக்கிரை!

துவாரன் | மார்ச் 15, 2026:

துவாரன், ஜாலான் துங்குன் மராபஹாய் தம்பலாங் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், வாகனக் கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சுமார் 700 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

இன்று மதியம் சுமார் 1:00 மணியளவில் அருகில் உள்ள காட்டில் முதலில் தீப்பிடித்துள்ளது என்று, துவாரன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் குரோங் அக் பெக்கி தெரிவித்துள்ளார்.

பலத்த காற்றினால் காட்டுத்தீ வேகமாகப் பரவி, சுமார் 0.8 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வாகனக் கிடங்கிற்குள் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஒவ்வொன்றாகத் தீப்பற்றத் தொடங்கின.

துவாரன் தீயணைப்பு நிலைய வீரர்கள் மட்டுமின்றி, லிந்தாஸ் (Lintas) மற்றும் கோத்தா கினபாலு நிலையங்களில் இருந்து மொத்தம் 25 வீரர்கள் மற்றும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுப் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, மாலை 3:31 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், அதே இடத்தில் இருந்த மேலும் 30 வாகனங்கள் தீயில் சிக்காமல் பாதுகாக்கப்பட்டன.

நல்லவேளையாக இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் சேதமடைந்த வாகனங்களின் மொத்த மதிப்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here