ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: சிவசங்கரியின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டு!

கோலாலம்பூர் | மார்ச் 16, 2026

நேற்று ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் (2026) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரம் எஸ். சிவசங்கரிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சிவசங்கரியின் இந்த வெற்றி நாட்டின் பெருமையின் சின்னம் என்றும், இளம் தலைமுறையினர் சிறந்து விளங்க இது ஒரு உத்வேகமாக அமையும் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிவசங்கரி, இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மரீனா ஸ்டெபனோனியை (உலகத் தரவரிசை 19) எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிவசங்கரி, 11-7, 11-4, 11-8 என்ற கணக்கில் நேரடி செட்களில் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்த முழுப் போட்டியையும் அவர் வெறும் 28 நிமிடங்களில் முடித்து சாம்பியன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:
“2026 ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அபார வெற்றி பெற்ற நமது தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தச் சாதனை தேசிய விளையாட்டு உலகிற்குப் பெருமை சேர்ப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் மலேசியாவிற்குப் புகழ் சேர்க்கும் நமது வீரர்களின் உறுதி, கட்டுப்பாடு மற்றும் போராட்ட மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும். வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளைப் படைக்க இது இளம் தலைமுறையினருக்கு ஒரு உந்துதலாக அமையும்,” என்று பதிவிட்டுள்ளார்.

சிவசங்கரியின் இந்த வெற்றி, ஸ்குவாஷ் விளையாட்டில் மலேசியா மீண்டும் உலக அளவில் முன்னிலை பெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here