பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சித் தலைவர் மாற்றம்: அகமட் சம்சூரி சிறந்த தேர்வு என ஹாடி அவாங்கின் மருமகன் ஆதரவு!

கோலாலம்பூர் | மார்ச் 16, 2026:

பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினரும் திரெங்கானு முதலமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் மிகவும் பொருத்தமானவர் என சுங்கை பூலோ பாஸ் (PAS) கிளைத் தலைவர் ஜஹாருடின் முகமட் தெரிவித்துள்ளார்.

பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனான ஜஹாருடின், சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல் தலைவராகவும் இருக்கும் சம்சூரி, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் கூட்டணியின் செயல்பாடுகளில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும் என்று ஜஹாருடின் குறிப்பிட்டார்.

“நாடாளுமன்ற விவாதங்களின் போது முரண்பாடான நிலைப்பாடுகள் உருவாவதைத் தவிர்க்க சம்சூரியின் தலைமை உதவும். இல்லையெனில், கூட்டணி ஒரு முடிவையும், எதிர்க்கட்சித் தலைவர் வேறொரு முடிவையும் எடுக்கும் சூழல் உருவாகலாம்,” என்று அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், பெர்சத்து (Bersatu) கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பதவி ஊசலாட்டத்தில் உள்ளது. பெரும்பான்மை எம்பி-க்கள் விரும்பினால் தாம் பதவியை விட்டு விலகத் தயார் என அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதம் பாஸ் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஸ் கட்சிக்கு வழங்க கூட்டணி கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்சூரியை ஆதரித்தாலும், எதிர்கால பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மேன் அல்லது டத்தோ இட்ரிஸ் அகமட் ஆகியோரே பொருத்தமானவர்கள் என்று ஜஹாருடின் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் பாஸ் கட்சியைச் சேர்ந்த புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று டாக்டர் அகமட் சம்சூரி ஏற்கனவே தெரிவித்துள்ளார். சம்சூரிக்கு அடுத்தபடியாக, தக்கியுதீன் ஹசான் இந்தப் பதவிக்கான இரண்டாவது விருப்பத் தேர்வாக ஜஹாருடினால் முன்மொழியப்பட்டுள்ளார்.

பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான இந்தத் தலைமைத்துவ மாற்றம், மலேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here