ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: ஆய்வுக்குழு பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி,நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த ஒரே நாடு. ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பற்றி ஆராய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 39 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியலமைப்பு சட்ட வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.

மேலும், இந்த குழுவினர் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் கூட்டத்தை நடத்தினர். அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், முன்னாள் தலைமை நீதிபதிகள் சஞ்சீச் கண்ணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் கே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் குழுவில் ஆஜராகி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

அத்துடன் இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்க கோரும் தீர்மானம் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, அதன் தலைவர் பி.பி.சவுத்ரி மக்களவையில் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், “அரசியல் சாசன திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை ஆய்வு செய்யும் கூட்டுக்குழுவின் கால அவகாசத்தை, இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here