மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், 2023-ஆம் ஆண்டு முதல் தமது முழு சம்பளம் மற்றும் படிகளை (அலவன்ஸ்) சுங்கை பூலோ தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து வழங்கி வருகிறார். இதுவரை அவர் வழங்கிய ஒட்டுமொத்த பங்களிப்புத் தொகை சுமார் 800,000 ரிங்கிட்டை எட்டியுள்ளது 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றது முதல், தமக்குக் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்கே திருப்பி அளிப்பதாக வழங்கிய வாக்குறுதியை டத்தோஶ்ரீ ரமணன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறார். இனம் மற்றும் மதப் பாகுபாடின்றி மக்களின் சுமையைக் குறைக்கும் ஒரு தொடர்ச்சியான முயற்சியாக இந்த மனிதாபிமான அணுகுமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் மசூதிகள், சூராக்கள், சீனக் கோவில்கள், இந்து ஆலயங்கள், தேவாலயங்களுக்கு என மொத்தம் 65,200 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி சமய நிறுவனங்களின் மேலாண்மைக்கும், புனித ரமலான் மாதத்தில் தேவையுள்ள மக்களுக்கு உதவுவதற்கும் இலக்காகக் கொண்டு விநியோகிக்கப்பட்டது. தமது பங்களிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த டத்தோஶ்ரீ ரமணன், வழங்கப்பட்ட ஒவ்வொரு உதவியும் ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தாம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு என்று குறிப்பிட்டார்.
“இது வெறும் தொகையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாகப் பொறுப்புணர்வு சார்ந்தது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியைச் செயல்பாட்டின் மூலம் நிலைநிறுத்துவதே எனது கடமை,” என்று அவர் வலியுறுத்தினார். அதே வேளையில், இந்த ஆண்டு ரமலான் காலத்தை முன்னிட்டு சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் 10,000 பொட்டலங்கள் ‘புபுர் லம்புக்’ கஞ்சி விநியோகிக்கப்பட்டது. நான்காவது ஆண்டாகத் தொடரும் இந்தத் திட்டம், உள்ளூர் மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.
மேலும், ஹரி ராயா கொண்டாட்டத் தயாரிப்புகளுக்காக குறைந்த வருமானம் பெறும் (பி40) குடும்பங்களுக்கு 3,350 உணவுப் கூடைகள் வழங்கப்பட்டன. சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் மூலம் அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 80,350 ரிங்கிட் செலவில் பல்வேறு நோன்புத் திறப்பு நிகழ்வுகளும் உதவித் திட்டங்களும் செம்மையாகச் செயல்படுத்தப்பட்டன. சமூகத்தில் ஒற்றுமை மற்றும் அக்கறை உணர்வு வலுப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட டத்தோஶ்ரீ ரமணன், குறிப்பாகத் தற்போதைய சவாலான பொருளாதாரச் சூழலில் எவரும் கைவிடப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே தமது முதன்மை இலக்கு என்றும் தெரிவித்தார்.












