திருச்சி விமான நிலைய புதிய முனையம்; ஜனவரி 2ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடியில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் நான்கு நுழைவுவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பயணிகள் வெளியேற நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே எந்திரங்கள், வெளிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுண்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்திற்கு உள்ளே இருந்து பஸ்களில் பயணிகளை அழைத்து செல்வதற்காக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வெளிநாட்டு பயணிகள் 4 ஆயிரம் பேரையும் கையாள முடியும். 750 கார்கள் இருக்கும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த பணிகள் அனைத்தும் 93 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.இந்த நிலையில் விமான நிலைய புதிய முனையத்தை அடுத்த மாதம் (ஜனவரி) 2ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் நேரம் மற்றும் கலந்து கொள்ள உள்ளவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here