இந்திய இளைஞர்களுக்கான “Blacklisted Young: Protect Your Financial Future” எனும் நிதி விழிப்புணர்வு நிகழ்வு சுங்கை சிப்புட்டில் உள்ள பொது மண்டபத்தில் நடைபெற்றது. மலேசிய இந்திய இளைஞர் மன்றம் சுங்கை சிப்புட் கிளை, கடன் ஆலோசனை, மேலாண்மை முகமை (AKPK) ,SE Training & Consultancy இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு கிளைத் தலைவர் என்சிக் சூ @ பழனியின் முயற்சியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், இளைஞர்களிடையே நிதி மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இளம் வயதிலேயே ‘கறுப்புப் பட்டியலில் இணையும் அபாயங்களை எடுத்துரைப்பதாகும். CCRIS மற்றும் CTOS போன்ற கடன் பதிவுகளின் அவசியத்தையும், தவறான கடன் மேலாண்மையின் விளைவுகளையும் AKPK அரசாங்க நிறுவனத்தை சார்ந்த நவகுமார் விளக்கினார். இளைஞர்கள் இளம் வயதிலேயே தங்களின் நிதி நிலைகளை சரியாக திட்டமிடுவது அவசியம் என நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவர் என்சிக் சூ @ பழனி தெரிவித்தார்.
நம் நாட்டில் பல இளைஞர்கள் சரியான நிதி திட்டமிடல் இல்லாததால் இளம் வயதிலேயே கடன் பிரச்சனையில் சிக்கி,தங்களின் பெயர் கருப்புப்பட்டியலில் பதிக்கும் அவள நிலைக்கு ஆளாவது வருத்தமளிப்பதாக அவர் கூறினார். இதனை களையும் பொருட்டு இது போன்ற நிகழ்வுகளை மலேசிய இந்திய இளைஞர் மன்றம் ஆங்காங்கே நடத்திவருவதாக அவர் தெரிவித்தார். மேலும், நிதி திட்டமிடல், கடன் கட்டுப்பாடு, பொறுப்பான செலவினம் குறித்த பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சி, இளைஞர்களில் நிதி ஒழுங்கு, பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுவதாக என்சிக் சூ @ பழனி தெரிவித்தார். சுமார் 30 இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், பங்கேற்பாளர்களுக்கு தங்களின் CCRIS பதிவுகளை இலவசமாகச் சரிபார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் சமூக ஆய்வாளர் கி.மணிமாறன், சுசாலியா எட்வினா மல்டாஸ் , மலேசிய இந்திய இளைஞர் மன்ற பேராக் மாநில பிரதிநிதிகள் ஆகியோர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
(எஸ்.லிங்கேஸ்வரன்)










