கடும் வெப்ப அலை: உயிருக்கு ஆபத்தான ‘வெப்பத்தாக்கு’ (Heatstroke) ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

கோலாலம்பூர் | மார்ச் 24, 2026

மலேசியாவின் பல பகுதிகளில் நீடித்து வரும் கடும் வெப்பம், உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக ‘ஹீட்ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பத்தாக்கு மற்றும் நீண்டகால உடல்நலப் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புத்ரா பல்கலைக்கழக (UPM) பொது சுகாதார மருத்துவ நிபுணர் பேராசிரியர் டாக்டர் மலினா ஒஸ்மான் இது குறித்துக் கூறியதாவது, உடலில் வெப்பத்தை ஒழுங்குபடுத்தும் திறன் குறைவதால் இதயக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ‘வெப்பத்தாக்கு’ (Heatstroke) உண்டாகலாம். இது உயிரிழப்புக்கும் வழிவகுக்கும்.

தொடர்ச்சியான வெப்பம் நீரிழப்பை (Dehydration) உண்டாக்கி, சிறுநீரகப் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களைத் தீவிரப்படுத்தும்.

அதிகப்படியான வெப்பம் மன அழுத்தத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தி மனச்சோர்வு (Depression) போன்ற மனநலப் பாதிப்புகளையும் உண்டாக்கலாம். மேலும் வயதானவர்கள், சிறுநீரக நோயாளிகள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune conditions) உள்ளவர்கள் இந்த வெப்ப அலையினால் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள்.

இந்நிலையில் சுல்தான் ஜைனல் அபிடின் பல்கலைக்கழக (UniSZA) விரிவுரையாளர் டாக்டர் ஆர்யாத்தி அகமட் மற்றும் வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர், அதில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள் மற்றும் சரிவிகித உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அதிக இனிப்பு, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை தாகத்தை அதிகப்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.

மேலும் அதிக வெப்பத்தில் உணவுகள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளதால், அவற்றைச் சரியாகச் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நண்பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். அவசியம் சென்றால் குடை அல்லது தொப்பி அணிந்து நிழலான இடங்களைப் பயன்படுத்துமாறும் அவர் மேலும் கூறினார்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை தகவலின்படி: நிலை 2 (Level 2): கெடாவின் பெண்டாங் (Pendang), பாலிங் (Baling) மற்றும் பாடாங் தெராப் (Padang Terap) ஆகிய பகுதிகளில் வெப்பநிலை 37°C முதல் 40°C வரை பதிவாகியுள்ளது.

நிலை 1 (Level 1): பெர்லிஸ், கோலாலம்பூர் மற்றும் பினாங்கு உள்ளிட்ட 15 பகுதிகளில் வெப்பநிலை 35°C முதல் 37°C வரை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here