மானிய விலை பெட்ரோல் முறைகேடு: பெட்ரோல் நிலையங்களின் சுமையைக் குறைக்க அரசுடன் ஒத்துழைக்க PDAM கோரிக்கை!

கோலாலம்பூர் | மார்ச் 25, 2026

மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் (PDAM), மானிய விலைப் பெட்ரோல் விநியோகத்தில் நிலைய உரிமையாளர்கள் சந்திக்கும் பொறுப்பு மற்றும் சட்டச் சிக்கல்களைக் குறைக்க அரசாங்கத்துடன் பலமான மூலோபாய ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் கைமுறையாக (Manual) கண்காணிக்கப்படுவதில் பல சிரமங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய PDAM, பின்வரும் கருத்துகளை முன்வைத்துள்ளது:

பெட்ரோல் நிலைய அளவில் ஊழியர்கள் மட்டுமே அனைத்தையும் கண்காணிப்பதில் வரம்புகள் உள்ளன. எனவே, முறைகேடுகளைத் தவிர்க்க நவீன தொழில்நுட்ப ஒத்துழைப்பு அவசியம். அத்தோடு RON95 பெட்ரோல் மற்றும் மானிய விலை டீசல் விநியோக விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பதை சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.

அண்மையில் ஜோகூர், ஸ்கூடாய் பகுதியில் பிளாஸ்டிக் கொள்கலன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட சம்பவத்தில் நிதி அமைச்சகம் மற்றும் உள்நாட்டு வணிக அமைச்சகம் (KPDN) எடுத்த வேகமான நடவடிக்கைகளைச் சங்கம் பாராட்டியுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவைத் தொடர்ந்து, ஸ்கூடாயில் பிளாஸ்டிக் கொள்கலன்களில் பெட்ரோல் நிரப்பிய நபரின் MyKad முடக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த வாகன உரிமையாளர் இனி Budi95 திட்டத்தின் கீழ் மானியப் பலன்களைப் பெற முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“மானிய விநியோகத்தில் நடக்கும் ஒவ்வொரு துளி முறைகேடும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும். இது போன்ற சம்பவங்கள் தனிப்பட்ட சிலரால் மட்டுமே செய்யப்படுகின்றன, இது ஒட்டுமொத்த மலேசியர்களின் மனநிலை அல்ல” என்று PDAM தெரிவித்துள்ளது.

மேலும், மானியத் துஷ்பிரயோகத்தைத் தடுக்க அனைத்து நிலைய உரிமையாளர்களுக்கும் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களையும் நினைவூட்டல்களையும் வழங்கப் போவதாக சங்கம் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here