பத்து பெரிங்கியில் தீ சம்பவம்; 11 வீடுகள் தீக்கிரையாயின!

பினாங்கு | மார்ச் 27, 2026

பினாங்கு, பத்து பெரிங்கியில் உள்ள கம்போங் டின் மன்போ (Kampung Din Manpo) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 11 ஈரடுக்கு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

இன்று காலை 11:29 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது.

பாகான் ஜெர்மால் மற்றும் தெலுக் பஹாங் நிலையங்களைச் சேர்ந்த 23 தீயணைப்பு வீரர்கள், நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீரர்களின் தீவிர போராட்டத்திற்குப் பிறகு, மதியம் 12:21 மணியளவில் தீ பரவுவது தடுக்கப்பட்டு முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று, பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ்கூறினார்.

சம்பவ இடத்திற்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்ததால், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

மேலும் தீயை அணைக்கத் தேவையான நீர் அழுத்தம் குறைவாக இருந்ததும் மீட்புப் பணியைத் தாமதப்படுத்தியது.

இந்த விபத்தில் 11 வீடுகள் சுமார் 80 விழுக்காடு வரை தீக்கிரையாகின.

அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும். தற்போது அந்தப் பகுதியில் ‘ஓவர்ஹால்’ (Overhaul) எனப்படும் எஞ்சியிருக்கும் நெருப்புப் பொறிகளை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் மற்றும் சொத்துச் சேத மதிப்பு குறித்துத் தீயணைப்புத் துறையினர் தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here