KLCC தாக்குதல்: மேலும் 3 புகைப்படக் கலைஞர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்! அடையாள ஆவணங்கள் இல்லாதது அம்பலம்

கோலாலம்பூர் | மார்ச் 30, 2026

கோலாலம்பூர் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர (KLCC) பகுதியில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பாக, உரிமம் இல்லாத மேலும் மூன்று புகைப்படக் கலைஞர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த வாரம் இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவரை ஒரு கும்பல் தாக்கியதைக் கண்ட பொதுமகன் ஒருவர், அதனைத் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அந்த கும்பல் திடீரென அந்த நபரையும் கத்தியால் (Kerambit knife) தாக்கியுள்ளது என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஜாலான் அம்பாங் பகுதியில் உரிமம் இன்றிப் புகைப்படங்கள் எடுத்து வந்த 5 பேரைப் போலீசார் கைது செய்தனர் என்றும், டாங் வாங்கி (Dang Wangi) மாவட்டப் போலீஸ் தலைவர் ஏ.சி.பி சசாலி ஆடம் (ACP Sazalee Adam) கூறினார்.

இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவர் நாளை ஆஜர்படுத்தப்படுவார்கள்.

இவர்கள் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 149 (சட்டவிரோதக் கூடுதல்) மற்றும் பிரிவு 324 (ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை ஆஜர்படுத்தப்படவுள்ள மூன்று புகைப்படக் கலைஞர்கள் மீது 1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவு விதிமுறைகளின் விதி 25(1)(n)-இன் கீழ் வழக்குப் பதியப்படும். மலேசியக் குடிமக்களுக்கான முறையான அடையாள ஆவணங்களை (IC) வைத்திருக்கத் தவறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

KLCC போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் உரிமம் இன்றிப் புகைப்படம் எடுப்பவர்களால் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைக் கட்டுப்படுத்தப் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முறையான அனுமதி அட்டைகள் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here