மது போதையால் வந்த விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் பெர்கேசோ ஓய்வூதியம்! மாதந்தோறும் RM2,888 உதவி

ஷா ஆலம் | ஏப்ரல் 3, 2026

டந்த ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் வாகனம் ஓட்டியவரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின் (Amirul Hafiz Omar) மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு, சமூக பாதுகாப்பு அமைப்பான ‘பெர்கேசோ’ (PERKESO) வாழ்நாள் கால ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது.

பெர்கேசோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜிஸ் முகமட், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:” அமிருல் ஹபீஸ் கடந்த 15 ஆண்டுகளாக லாஜிஸ்டிக்ஸ் துறையில் (TVH Malaysia Sdn Bhd) பணியாற்றி வந்துள்ளார். அவர் பெர்கேசோவில் தீவிரமாகப் பங்களிப்பு செய்து வந்ததால், அவரது குடும்பத்தினர் ‘பென்சன் பெனகாட்’ (Pencen Penakat – Survivors’ Pension) பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அமிருல் ஹபீஸின் மனைவி நூர் நதியா (32) மற்றும் 7 முதல் 9 வயதுடைய அவரது மூன்று குழந்தைகளுக்கு மாதந்தோறும் மொத்தம் RM2,888.17 நிதியுதவி வழங்கப்படும்.

இந்தத் தொகை நூர் நதியாவிற்கு அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு அவர்களின் 21 வயது வரை அல்லது முதல் பட்டப்படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகையாக இது தொடரும்.

இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, இறுதிச் சடங்கு மேலாண்மை நிதியாக RM3,000 மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும் பெர்கேசோ அதிகாரிகள் வழங்கினர். மேலும், குழந்தைகளின் எதிர்காலக் கல்விக்காகப் படிப்பு கடன்கள் மற்றும் இதர உதவிகளையும் வழங்க பெர்கேசோ உறுதியளித்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது டத்தோஸ்ரீ முகமட் அஸ்மான் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்: “ஊழியர்களுக்கான பெர்கேசோ பங்களிப்பை முறையாகச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறினால், இது போன்ற விபத்து காலங்களில் ஊழியர்களின் குடும்பத்தினர் பாதிப்படைவர்” என அவர் எச்சரித்தார்.

கடந்த மார்ச் 31 முதல் அமலுக்கு வந்துள்ள ‘ஜிக் தொழிலாளர்கள் சட்டம் 2025’-இன் படி, டெலிவரி ரைடர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிளாட்பார்ம் சார்ந்த அனைத்து ஊழியர்களும் பெர்கேசோவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து அல்லது உயிரிழப்பு குறித்துத் தகவல் கிடைத்ததும், விண்ணப்பத்திற்காகக் காத்திருக்காமல் பெர்கேசோ அதிகாரிகளே நேரடியாகக் களமிறங்கி உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here