ஜோகூரில் குடிநுழைவுத் துறை அதிரடி வேட்டை: மூன்று மாவட்டங்களில் 76 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

ஜோகூர் பாரு | ஏப்ரல் 7, 2026

ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட், மூவார் மற்றும் மெர்சிங் ஆகிய மாவட்டங்களில் கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைகளில், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 76 வெளிநாட்டவர்களைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், சிகாமாட்டில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நள்ளிரவில் சில கேளிக்கை விடுதிகளில் (Entertainment Outlets) அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களாக (GRO) பணியாற்றி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 28 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 18 தாய்லாந்து, 6 வியட்நாம் மற்றும் 2 லாவோஸ் நாட்டவர்கள் அடங்குவர்.

மேலும் சட்டவிரோதத் தொழிலாளர்களுக்குப் புகலிடம் அளித்ததாக அந்த விடுதிகளின் மேலாளர்கள் என நம்பப்படும் இரு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மூவாரில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, வணிக வளாகங்கள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மாலை 6:00 மணி முதல் சோதனை நடைபெற்றது. இதில் இந்தோனேசியா மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு மாதக் குழந்தை முதல் 48 வயதுடையவர்கள் வரை அடங்குவர்.

அதேநாளில் மெர்சிங்கில் உள்ள கட்டுமான இடங்கள் மற்றும் வணிக வளாகங்களை இலக்காகக் கொண்டு காலை நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில் இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த 21 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்.

மெர்சிங் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், சில உள்ளூர் ஏஜெண்டுகள் தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக வாடகை ஒப்பந்தங்கள் மூலம் சட்டவிரோதக் குடியேறிகளுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் செத்தியா துரோப்பிக்கா (Setia Tropika) மற்றும் பெக்கான் நேனாஸ் (Pekan Nenas) குடிவரவுத் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர் என்று, ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் தாருஸ் கூறினார்.

மேலும் “நாட்டின் சட்டங்களை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here