காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்து – சுகாதார உதவியாளர் உயிரிழப்பு!

ஷா ஆலம்:

சுங்கை பெசார், ஜாலான் பாரிட் 8, ஸ்ரீ காம்புட் பகுதியில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில், கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் (HTAR) பணிபுரிந்த 36 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

பலியான முகமட் நைமுல் அஸ்மி முகமட் பாண்டி (Mohd Naimul Azmi Mohd Pandi), தனது பணியிடமான கிள்ளான் மருத்துவமனைக்குத் தனது யமஹா 135LC மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நேற்று காலை சுமார் 6:00 மணியளவில், எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று மாலை 6:48 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சபாக் பெர்ணம் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரண்டு முகமட் யூசுப் அகமட் (Superintendent Md Yusof Ahmad) இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். தினசரி தனது வீடான சுங்கை பஞ்சாங்கிலிருந்து கிள்ளானுக்குப் பணிக்குச் சென்று வரும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவர், இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here