மலேசியா முழுவதும் ‘ஓப் வேப்’ அதிரடி வேட்டை: 46 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் ‘வேப்’ சாதனங்கள் பறிமுதல்!

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் உள்ள 1,670 ‘வேப்’ (Vape) விற்பனை நிலையங்களில் கடந்த ஏப்ரல் 13 முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ‘ஓப் வேப் 1.0’ சோதனையில், சுமார் 46 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் மின்-சிகரெட் சாதனங்களை மலேசியக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையில் 19.67 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 18.55 கிலோ திரவ நிலையில் இருந்த ‘ஃபுரானில் ஃபெண்டானில்’ (furanyl fentanyl) எனும் போதைப்பொருள் அடங்கும் என்றும் 8,091 வேப் சாதனங்கள் மற்றும் 5,257 கார்ட்ரிட்ஜ்கள் (Cartridges) கைப்பற்றப்பட்டன என்றும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு மட்டும் 28.8 லட்சம் ரிங்கிட் ஆகும். இதர சாதனங்களையும் சேர்த்து மொத்த மதிப்பு 46 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைவசம் வைத்திருந்த குற்றத்திற்காக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் மரண தண்டனைக்குரிய 39B பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

மொத்தம் 868 பேருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையில், 13 பேருக்குப் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 728 பொழுதுபோக்கு நிலையங்கள் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டு, அவற்றுக்கு 1,149 சம்மன்கள் வழங்கப்பட்டன. 5 கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.

இந்த மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் 1,177 போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதாரம், உள்ளாட்சி மன்றங்கள், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,011 பணியாளர்கள் பங்கேற்றனர்.

‘வேப்’ திரவங்களில் போதைப்பொருட்களைக் கலந்து விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதே இந்தச் சோதனையின் முக்கிய நோக்கம் என டத்தோ ஹுசைன் தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 48,050 பயனர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here