மலேசியாவில் 3 மாதங்களில் RM91.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: கடத்தல் கும்பல்களை ஒடுக்க ‘சொஸ்மா’ சட்டம் பாயும்- அயோப் கான்

கோலாலம்பூர்:

லேசியா போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடு அல்ல, ஆனால் அது ஒரு முக்கியப் போக்குவரத்து மையமாக (Transit Hub) பயன்படுத்தப்படுவதாகத் துணைப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தம் 310 கோடி ரிங்கிட் (RM3.1 Billion) மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் மூன்று மாதங்களிலேயே 915 மில்லியன் ரிங்கிட் (சுமார் 91.5 கோடி ரிங்கிட்) மதிப்பிலான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

‘கோல்டன் ட்ரையாங்கிள்’ (Golden Triangle) எனப்படும் பகுதியிலிருந்து வரும் போதைப்பொருட்கள், மலேசியாவின் வடக்கு எல்லை வழியாகத் தீபகற்ப மலேசியாவிற்குள் நுழைகின்றன.

நிலம், கடல் மற்றும் வான் வழியாக இவை நாட்டிற்குள் கொண்டு வரப்படுகின்றன. இதில் பெரும் பகுதி மற்ற நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும், சிறிய அளவிலேயே உள்நாட்டுப் பயன்பாட்டிற்குச் செல்வதாகவும் அவர் விளக்கினார்.

போதைப்பொருள் கடத்தலை வேரோடு அழிக்கக் காவல்துறை புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது,
வெறும் போதைப்பொருட்களை மட்டும் கைப்பற்றாமல், அந்தக் கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படுபவர்கள், போக்குவரத்து செய்பவர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் என ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின் (SOSMA – சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அயோப் கான் எச்சரித்துள்ளார். இதன் மூலம் கடத்தல் கும்பலின் முக்கியத் தலைவர்கள் சட்டத்திலிருந்து தப்புவதைத் தடுக்க முடியும்.

மலேசியாவின் பரந்த எல்லைப்பகுதிகள் வழியாகப் போதைப்பொருள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. எனவே, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுடன் உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்படுவது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here