சமூக வலைதளங்களில் வைரலான காவல்துறை அதிகாரியின் ‘பணப் பரிமாற்ற’ வீடியோ – ஈப்போ போலீசார் தீவிர விசாரணை

கோலாலம்பூர்:

ப்போவில் போலீஸ் அதிகாரி ஒருவர் பொதுமக்களிடமிருந்து பணம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து காவல்துறை உள்முக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

“Update & Info” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ காட்சிகளை ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

வீடியோவில் காணப்படும் பலநோக்கு வாகனத்தில் (MPV) “PK 56” என்ற குறியீடு உள்ளது. இது பேராக் மாநில போலீஸ் பிரிவின் கீழ், ஈப்போ மாவட்ட தலைமையகத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வாகனமாகும் என்று, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமை துணை ஆணையர் (ACP) முஹம்மட் நஜிப் ஹம்சா கூறினார்.

இந்தச் சம்பவம் நடந்த துல்லியமான இடம் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரி யார் என்பது குறித்து தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் முறைகேடுகளில் ஈடுபடும் எவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

“இந்த விசாரணை வெளிப்படையான, முழுமையான மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும். சட்டத்தையோ அல்லது விதிமுறைகளையோ மீறியது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது பணியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என முஹம்மட் நஜிப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதே வேளையில், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here