கெடா- தாய்லாந்து எல்லை அருகே பெட்ரோல் கடத்தல் முயற்சி முறியடிப்பு ; இரு வெளிநாட்டு பெண்கள் கைது

படாங் தெராப்:

கெடா மாநிலத்தின் துரியான் புருங் (Durian Burung) எல்லைப் பகுதியில், கார்களில் கூடுதல் பெட்ரோல் டாங்கிகளைப் பொருத்தி எரிபொருள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டுப் பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று ஏப்ரல் 27-ஆம் தேதி மதியம் 2 மணியளவில், துரியான் புருங் பகுதியில் உள்ள கோத்தா புத்ரா காவல் நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் (Roadblock), பொதுப் பாதுகாப்புப் படையினர் (GOF) இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

பிடிபட்ட இரு பெண்களும் 30 மற்றும் 40 வயதுடையவர்கள். அவர்கள் ஓட்டி வந்த உள்ளூர் பதிவு பெற்ற இரு புரோட்டான் வீரா (Proton Wira) கார்களைச் சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாகக் கூடுதல் பெட்ரோல் டாங்கிகள் பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 200 லிட்டர் பெட்ரோல் (மதிப்பு RM774) மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரு கார்கள் என மொத்தம் RM15,574 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து கெடா மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் தலைமை அமலாக்க அதிகாரி ஜலினா அஜீஸ் விடுத்துள்ள அறிக்கையில்: “கட்டுப்பாட்டுப் பொருட்களான எரிபொருளைச் சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.”

கைது செய்யப்பட்ட இருவரும் 1961-ஆம் ஆண்டு வழங்கல் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். மானியம் வழங்கப்பட்ட பெட்ரோலை அண்டை நாடுகளுக்குக் கடத்துவதைத் தடுக்கும் நோக்கில் எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here