கோலாலம்பூர்:
கெப்போங், தாமான் எக்சான் (Taman Ehsan) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்டதீ விபத்தில் ஐந்து ஒற்றை மாடி வீடுகள் தீக்கிரையானதுடன் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் சுமார் 20 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த தீ விபத்தில் மொத்தம் 5 வீடுகள் சேதமடைந்தன. இதில் ஒரு வீடு முழுமையாக எரிந்து சாம்பலானது. மற்ற வீடுகள் 20 முதல் 80 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன.
அதிகாலை 4.29 மணியளவில், ஒரு வீட்டின் படுக்கையறையில் 53 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
தீ விபத்தில் ஹூண்டாய் கெட்ஸ் (Hyundai Getz) மற்றும் ஹூண்டாய் XG 250 ஆகிய இரண்டு கார்களும் தீக்கிரையாகின.
செலாயாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 27 வீரர்கள், ரவாங், ஜின்ஜாங் மற்றும் மஞ்சலாரா குழுவினரின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
“அதிகாலை 3.42 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, காலை 7.15 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது,” என்று அகமட் முக்லிஸ் தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



















