தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில், புதிய ஆட்சி இன்னும் பதவி ஏற்க முடியாத இழுபறியான சூழல் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டார். தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிடம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதரவு கோரப்பட்டது. இதையடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்துடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.தி.மு.க. கூட்டணியில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததுடன், வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி தொடரும் என்ற முடிவையும் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கை எட்டும் முயற்சியில் விஜய்க்கு முதல் கட்ட வெற்றி கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிரடி திருப்பமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதையடுத்து தமிழக கவர்னரை சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தற்போது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருப்பதால் விரைவில் ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், ஆளுநரிடம் இருந்து அழைப்பு வந்த பிறகே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.









