பங்கிர் தீவு படகு விபத்து: மேலும் 4 சடலங்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

ஈப்போ:

பேராக், பங்கிர் தீவு (Pulau Pangkor) கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றிச் சென்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இன்று மேலும் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மாலை 5.45 மணியளவில் மலேசிய அரச கடற்படையினரால் (RMN) பூலோவிற்கு தென்மேற்கே 2.5 கடல் மைல் தொலைவில் மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் MMEA-வின் ‘PERKASA 1238’ படகு மூலம் புலோ சங்கா கெச்சிலுக்கு தென்மேற்கே 21.4 கடல் மைல் தொலைவில் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு சடலம் மீட்கப்பட்டது.

இதுவரை இந்த விபத்தில் சிக்கியவர்களில் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த விபத்தில் மொத்தம் 39 பேர் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது (முன்னதாக இந்த எண்ணிக்கை 37 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது).

கடந்த மே 11 அன்று பங்கிர் தீவிலிருந்து 8.2 கடல் மைல் தொலைவில் இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கி இந்த விபத்து நேரிட்டது.

இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் இந்த விபத்தில் காணாமல் போன மற்றவர்களைத் தேடும் 7-வது நாள் மீட்புப் பணி (SAR) தொடரும் என்றும், நாளை வேறு சடலங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாவிட்டால் இந்தத் தேடுதல் நடவடிக்கை இத்துடன் நிறைவு பெறலாம் என்றும் கேப்டன் முகமட் சுக்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here