பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3/- மற்றும் டீசல் ரூ.3/- என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.









