கோலாலம்பூர்:
சபா, துவாரான் (Tuaran) பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 589,230 ரிங்கிட் மதிப்புள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக நம்பப்படும் 61 வயது முன்னாள் வனக் காப்பாளர் (Forest Ranger) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகித் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின் வனவிலங்கு குற்றப் பிரிவு (WCB/PSK) மற்றும் சபா வனவிலங்கு துறை ஆகியவை இணைந்து இன்று காலை 7.15 மணியளவில் இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக அதன் தளபதி டத்தோ முகமட் ஜாக்கி அஷார் தெரிவித்தார்.
சந்தேக நபரின் இடத்திலிருந்து 55 ஜோடி மான்கொம்புகள், 3 காண்டாமிருகக் கொம்புகள், 330 எறும்புண்ணி செதில்கள் (Pangolin Scales), மலைப்பாம்புகளின் உடல்கள் மற்றும் தோல்கள், இருவாச்சி பறவையின் (Hornbill) மண்டை ஓடுகள், யானையின் எலும்புகள் மற்றும் தந்தங்கள் மற்றும் கரடியின் மண்டை ஓடுகள் மற்றும் இதர விலங்கு பாகங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, சந்தேக நபர் இந்த விலங்கு பாகங்களை சபாவின் உட்புற கிராம மக்களிடமிருந்து விலைக்கு வாங்கியும், தனது சொந்த சேகரிப்பிற்காகவும் வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் வனக் காப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக 2019-இல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணியில் சேர்ந்த காலத்திலிருந்தே இந்த விலங்கு பாகங்களைச் சேகரிக்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
இவ்வழக்கு ‘சபா வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1997’-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரிவு 41(1)-இன் கீழ் (பாதுகாக்கப்பட்ட விலங்குகளை வைத்திருத்தல்/வேட்டையாடுதல்): குறைந்தபட்சம் RM50,000 முதல் அதிகபட்சம் RM250,000 வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பிரிவு 41(2)-இன் கீழ் (பாதுகாக்கப்பட்ட விலங்குகளை விற்றல்): குறைந்தபட்சம் RM30,000 முதல் அதிகபட்சம் RM100,000 வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் துவாரான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக சபா வனவிலங்கு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





















