சிரம்பான்:
நான்கு வயது சிறுவன் ஒருவனை வீட்டின் பின்புறம் வலுக்கட்டாயமாக வெளியே உட்கார வைத்து, கொடூரமாகத் தாக்கிய விவகாரத்தில் 60 வயதுடைய குழந்தை பராமரிப்பாளரான பெண்மணி (Babysitter) ஒருவரைப் போலீசார் நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய 75 விநாடிகள் கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவின் மூலம் இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று, நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமட் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 8.00 மணியளவில், சிரம்பான் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்திற்குப் பெற்றோர் தரப்பிலிருந்து ஒரு புகார் அளிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் 75 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு பெண் ஒரு சிறுவனை வீட்டின் பின்புறத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வீடியோவை உற்றுநோக்கிய பெற்றோர், பாதிக்கப்படுவது தங்களின் சொந்த மகன் என்பதை அடையாளம் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாரை நாடினர்.
முதற்கட்ட விசாரணையில், தங்களின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வரும் அந்த 60 வயதுப் பெண்மணியிடம், கடந்த ஏழு மாதங்களாகத் தங்களது குழந்தையைப் பராமரிப்பிற்காகப் பெற்றோர் அனுப்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு, மேல் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக இங்குள்ள துவான்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு (Tuanku Jaafar Hospital) அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
அதிரடிக் கைது: பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உடனே களமிறங்கிய போலீசார் நேற்றிரவு 9.45 மணியளவில் செண்டாயன் (Sendayan) பகுதியில் உள்ள அந்தப் பெண்மணியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தப் பெண்மணி மீது 2001 குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a)-இன் கீழ் (குழந்தைகளைத் துன்புறுத்துதல் மற்றும் அலட்சியப்படுத்துதல்) மேல்விசாரணை நடத்துவதற்காக, இன்று காலை சிரம்பான் நீதிமன்றத்தில் போலீஸ் காவல் (Remand) கோரி மனு விண்ணப்பிக்கப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் கூடுதல் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக இவ்வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் காமரூல் ஆரிஃபின் காமரூசமானை 06-6033222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாநிலக் காவல்துறைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வைரலான அந்த வீடியோவில், வீட்டின் வெளியே தனியாக விடப்பட்ட அந்தக் குழந்தை பயந்து அழுது கூச்சலிடுவதும், பின்னர் வீட்டிற்குள் இருந்து வெளியே வரும் அந்தப் பெண்மணி குழந்தையைக் கொடூரமாகத் திட்டி, மிரட்டி, முகத்தில் அறையும் காட்சிகளும் இடம்பெற்றுப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



















