ஜோகூர் பாரு:
ஜோகூர், ஸ்ரீ ஆலம் (Seri Alam) பகுதியில் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை (Molest) கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, 28 வயதுடைய ஆண் ஆசிரியர் ஒருவர் 6 நாட்களுக்குப் போலீஸ் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அந்த ஆசிரியரை வரும் மே 27-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீ ஆலம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் (ACP) முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தற்காலிகக் காவல்துறைத் தலைவர் (Deputy Commissioner) ஹூ சுவான் ஹுவாட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட மாணவியின் 37 வயதுடைய தாய் நேற்று இரவு 9.00 மணியளவில் போலீசில் அதிகாரப்பூர்வப் புகார் ஒன்றை அளித்தார்.
தனது மகள் கடந்த ஆண்டு ஸ்ரீ ஆலம் பகுதியில் வைத்து அந்த ஆசிரியரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக அந்தத் தாய் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இப்புகார் கிடைத்த சில மணி நேரங்களிலேயே, அதாவது நேற்றிரவு 10.30 மணியளவில் அந்த ஆசிரியரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-இன் கீழ், போலீஸ் காவல் கோரும் விண்ணப்பத்திற்காகச் சந்தேக நபரான ஆசிரியர் இன்று காலை ஜோகூர் பாரு நீதிமன்றத்திற்குக் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 6 நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
இச்சம்பவம் குறித்து 2017 குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் பிரிவு 14(a)-இன் கீழ் (குழந்தையின் உடலில் பாலியல் நோக்குடன் தொடுதல்) போலீசார் தீவிர விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்குக் கடுமையான சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரணாக இருக்க வேண்டிய ஆசிரியரே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது கல்வி வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















