கிக் தொழிலாளர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை உறுதிசெய்யும் நோக்கில், சமூகப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வாழ்க்கை உயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு புதிய திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், தொழிலாளர்களின் பொருளாதார மீள்திறனை மேம்படுத்துவதற்காக 20 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டுடன் கூடிய பொருளாதார நிலைத்தன்மைத் தொகுப்புத் திட்டம் (பேஸ்- PACE) மற்றும் அதிநவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ- AI) சார்ந்த திறன்களை வழங்குவதற்காக 110 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘மை மாஹிர்’ (AI MyMahir) திட்டம் ஆகியவை மனிதவள அமைச்சினால் தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் முக்கிய முயற்சிகளாகும் என்றார்.
இத்திட்டங்கள் அனைத்தும் இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநர்கள் மற்றும் பி-ஹெய்லிங் (p-hailing) விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிக் தொழிலாளர் சமூகத்தையும் வலுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு இருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இன்று சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 1,000 கிராப் ஓட்டுநர்கள், விநியோகப் பங்காளர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட ‘கிராப் பங்காளர்களின் பாராட்டு விழாவில் சிறப்புரையாற்றியபோதே அவர் இந்த விவரங்களை வெளியிட்டார். மேலும், கிக் தொழிலாளர்கள் மனிதவளத் துறையின் (JTM) கீழ் இயங்கும் ‘ஏடிதெக்’ (ADTEC) மையங்கள் வழியாகத் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதே வேளையில் இன்னும் பரந்த வேலைவாய்ப்புகளையும் தொழில்முறை முன்னேற்றங்களையும் எட்டுவதற்கு பெர்கேசோவின் (PERKESO) ‘MYFutureJobs’ தளத்தை ஒரு சிறந்த ஊக்கியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் விவரித்தார்.
இதுமட்டுமின்றி, கிக் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு உரிமைகள், சமூகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் முறையான புகார்களைத் தெரிவிப்பதற்கான ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் பிரத்யேக ‘இ-புகார்’ (e-aduan) இணையப் பக்கமும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் நீடித்த ஒரு கிக் தொழிலாளர் சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம், சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து கிக் துறையின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இவ்விழாவின் நிறைவாக, பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை எளிதாக்குவதில் கிக் தொழிலாளர்கள் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்குத் தலைவணங்கும் விதமாக, அங்கு வருகை தந்திருந்த கிராப் பங்காளர்களுக்கு டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நினைவுப் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.











