நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஈப்போவில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தனது கல்வி நிலைய கட்டடத்தில் ஆசிரியர் தின விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடியது. இந்நிகழ்வில் கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, மாணவர்களின் முன்னேற்றத்திற்காக சேவை மனப்பான்மையுடன் கல்வி கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் சிறப்பு நிகழ்வுகள் விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின.
இந்நிகழ்வில் உரையாற்றிய முனைவர் சேகர் நாராயணன், ஆசிரியர்கள் சமுதாயத்தின் முதுகெலும்பாக திகழ்கிறார்கள் எனவும், ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சியையும் உருவாக்குபவர் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இன்றைய உலகில் கல்வி என்பது பாடப்புத்தக அறிவை மட்டும் வழங்குவதல்ல; மாணவர்களின் ஒழுக்கம், மனிதநேயம், பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்திறனை வளர்ப்பதும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும் என அவர் கூறினார்.
ஒரு மாணவனின் வெற்றியின் பின்னணியில் ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பும் பொறுமையும் மறைந்திருக்கும். ஆசிரியர்கள் தங்கள் பணியை ஒரு தொழிலாக அல்ல, ஒரு சேவையாகக் கருதி செயல்படுவதால்தான் நல்ல தலைமுறையை உருவாக்க முடிகிறது என அவர் வலியுறுத்தினார். இன்றைய தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களை சரியான பாதையில் வழிநடத்துவது ஆசிரியர்களின் பொறுப்பு என அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஆசிரியர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தியாகத்தை போற்றும் வகையில் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது மிகவும் அவசியம் எனவும் கல்விச் சேவையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் முனைவர் சேகர் நாராயணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் பேராக் இந்தியர் பூப்பந்து மன்றத்தலைவர் என்.லோகநாதன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் , சமூகப் பிரமுகர்கள் ஆகியோர் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.









