தைப்பிங் சிறை மரணம்: மலேசியாவில் அவசர சிறைச் சீர்திருத்தம் தேவை என ஹக்காம் வலியுறுத்தல்

​தெமர்லோ,  மலேசியாவின் தைப்பிங் சிறையில் கைதி ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக நடத்தப்பட்ட பொது விசாரணைக்குப் பிறகு, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறைச்சாலைகளிலும் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மனித உரிமைச் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ எம். ராமச்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ​அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தைப்பிங் சிறையில் நடந்த குறிப்பிட்ட ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சிறை அமைப்பிலும் உள்ள ஆழமான கட்டமைப்புச் சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச் சீர்திருத்தங்களை வெறும் குற்றவியல் நீதிப் பார்வையில் மட்டும் பார்க்காமல், மனித கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த விஷயமாக அணுக வேண்டும் என அவர் கோரியுள்ளார். அபராதம் செலுத்த முடியாதவர்கள், சிறிய குற்றங்களைச் செய்தவர்கள், குடிவரவு தடுப்புக்காவலில் உள்ளவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் சிறைகளில் உள்ளதால், சிறைத் தண்டனை என்பது ஒருவரின் சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமே தவிர, அவர்களின் மனித கண்ணியத்தைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

​மேலும், சிறைகளில் நிலவும் அதிகப்படியான நெரிசல், மோசமான வாழ்வாதார நிலைமைகள் மற்றும் கைதிகளை நடத்தும் விதம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ள டத்தோஸ்ரீ எம். ராமச்செல்வம், சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை மலேசிய அரசாங்கம் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, தைப்பிங் சிறையில் பலத்த காயம் மற்றும் இதயக் கோளாறு காரணமாக மரணமடைந்த கைதி கான் சின் எங் என்பவரின் மரணம் குறித்தும், இதர கைதிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் காவல் துறையினர் வெளிப்படையான, முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்றும், இது தொடர்பாகப் பதியப்பட்டுள்ள 46 போலீஸ் புகார்களின் விசாரணை நிலவரங்களை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தவறும் சிறை அமைப்பு, பொதுமக்களின் நம்பிக்கையையும் நீதியின் அடிப்படைக் கொள்கையையும் சீர்குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here