நீண்ட வார இறுதி விடுமுறை: மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலைகுத்திய போக்குவரத்து!

கோலாலம்பூர்:

மலேசியாவில் நீண்ட வார இறுதி விடுமுறையை (Long Weekend) முன்னிட்டு, நாட்டின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிக்கத் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் வாகனங்கள் மிக மெதுவாக செல்கின்றன.

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (LLM) போக்குவரத்து மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் (PLUS) வடக்கு மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் இரு வழித்தடங்களிலுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் பதிவாகியுள்ளது.

நெடுஞ்சாலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தற்போதைய போக்குவரத்து நிலைமை,
1. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (PLUS)
வடக்கு நோக்கிய வழித்தடம்: லெம்பா பெரிங்கின் (Lembah Beringin) முதல் தஞ்சோங் மாலிம் (Tanjung Malim) வரை, தாப்பா (Tapah) முதல் கோபெங் (Gopeng) வரை மற்றும் பண்டார் பாரு முதல் பண்டார் காசியா வரை வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன.

தெற்கு நோக்கிய வழித்தடம்: கெபாலா பாத்தாஸ் (Kepala Batas) முதல் ஊத்தான் கம்போங் சுங்கச்சாவடி வரை, சுங்கை பட்டாணி, சுங்கை துவா முதல் ஜூரு வரை, கோபெங் முதல் தாப்பா வரை மற்றும் கோலா கங்சார் முதல் மெனோரா குகைப்பாதை (Menora Tunnel) வரையிலும் நெரிசல் நீடிக்கிறது.

2. கோலாலம்பூர் – காரக் நெடுஞ்சாலை (KLK)
மேற்கு நோக்கிய வழித்தடம்: பெந்தோங் (Bentong) முதல் புக்கிட் திங்கி (Bukit Tinggi) வரை போக்குவரத்து மந்தமாக உள்ளது.

கிழக்கு நோக்கிய வழித்தடம்: மத்தியவட்டச் சாலை 2 (MRR2) முதல் கோம்பாக் சுங்கச்சாவடி (Gombak Toll) வரையிலும், கோம்பாக் முதல் கெந்திங் செம்பா (Genting Sempah) வரையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

மலேசியா – சிங்கப்பூர் எல்லைப் பகுதிகள்
நீண்ட விடுமுறையையொட்டி மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வழித்தடங்களிலும் வாகனப் போக்குவரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.

ஜோகூர் குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்தில் (CIQ) இருந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நோக்கி வாகனங்கள் மிக மெதுவாக நகர்கின்றன. அதேநேரம் இரண்டாவது இணைப்பு நெடுஞ்சாலை (Linkedua) லிங்கெடுவா பாலத்தில் இருந்து துவாஸ் (Tuas) நோக்கிச் செல்லும் பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது தவிர, எலைட் நெடுஞ்சாலை (Elite Expressway) புத்ராஜெயாவில் இருந்து காமுடா கோவ் வரையிலும், கிழக்குக்கரை நெடுஞ்சாலை 1-ல் (LPT1) தெமர்லோ முதல் காரக் வரையிலும் போக்குவரத்து நெருசல் ஏற்பட்டுள்ளது.

தலைநகருக்குள் சுங்கை பீசி நெடுஞ்சாலை (Besraya), டாமன்சாரா-புச்சோங் நெடுஞ்சாலை (LDP) ஆகிய நகர்ப்புறச் சாலைகளிலும், போர்ட் டிக்சன் செல்லும் சுற்றுலாப் பாதையான லுக்குட் (Lukut) முதல் தெலுக் கெமாங் கடற்கரை வரையிலும் வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருக்கின்றன.

பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிட்டு, பாதுகாப்பாகச் செல்லுமாறு மலேசிய நெடுஞ்சாலை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here