கோலாலம்பூர்:
சிரம்பான் 2 பகுதியில் கணவன், மனைவி மீது மிளகுப்பொடி ஸ்பிரே (Pepper Spray) அடித்து தாக்குதல் நடத்திய 50 வயது நபர் ஒருவரை, புகார் அளிக்கப்பட்ட ஆறே மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 49 வயது பெண்மணி அளித்த புகாரின் பேரில், நேற்று இரவு 11.45 மணியளவில் சிரம்பானில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமது யாத்திம் ஒஸ்மான் கூறினார்.
நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண்மணியும் அவரது கணவரும் தங்களது ‘பெரோடுவா பெஸா’ (Perodua Bezza) காரில் சென்று கொண்டிருந்தபோது, ‘ஹோண்டா அக்கார்ட்’ (Honda Accord) கார் ஒன்று தங்களைப் பின்தொடர்வதை கவனித்துள்ளனர்.
திடீரென அந்த ஹோண்டா கார், தம்பதியரின் வாகனத்தை முந்திச் சென்று, அவர்களுக்குக் குறுக்காக நிறுத்தி பாதையை வழிமறித்துள்ளது. பின்னர், காரில் இருந்து இறங்கிய அந்த நபர் தம்பதியரை வம்புக்கு இழுத்து, தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது, அந்த நபர் தனது காரின் பின்பகுதிக்குச் சென்று ஒரு பொருளை எடுத்து வந்து, திடீரென தம்பதியர் இருவர் மீதும் ஒரு திரவத்தைத் தெளித்துள்ளார். அது மிளகுப்பொடி ஸ்பிரே என்பதால், தம்பதியருக்குக் கண்களில் கடுமையான எரிச்சலும் அசெளகரியமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும், “Police” என்று எழுதப்பட்ட கருப்பு நிற மிளகுப்பொடி ஸ்பிரே டப்பாவைக் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபரை சோதனை செய்ததில், அவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான மூன்று குற்றப் பின்னணிகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், தற்போதைய முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் அவருக்குப் போதைப்பொருள் உட்கொண்டதற்கான நெகட்டிவ் (Negative) முடிவே வந்துள்ளது என முகமது யாத்திம் ஒஸ்மான் மேலும் கூறினார்.





















