முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில், கவர்னர் அர்லேக்கர் உரையாற்ற இருக்கிறார். கவர்னர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உரையை தொடர்ந்து, அடுத்த 3 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்வு, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கம், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. எனவே, பட்ஜெட் அறிவிப்பில் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். அதன்படி தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கொள்கை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், மதுபான கடைகள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here