74வது குருத்வாரா கிண்ண விளையாட்டு விழா பேராக்கில் கோலாகலமாக நடைபெற்றது

மலேசியா , சிங்கப்பூர் சீக்கியர் விளையாட்டு மன்றத்தின் (MSSSC) ஏற்பாட்டில் நடைபெறும் 74வது குருத்வாரா கிண்ணம் மற்றும் சீக்கியர் விளையாட்டு விழா 2026 பேராக் சீக்கிய சங்க திடலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்க நிகழ்வில் பேராக் ராஜா டி ஹிலிர் துங்கு ராஜா இஸ்கந்தர் த்சுல்கார்னைன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவரின் வருகை சீக்கிய சமூகத்திற்கு பெருமை சேர்ப்பதோடு, பேராக் அரச குடும்பத்திற்கும் பல்வேறு சமூகங்களுக்கும் இடையிலான நல்லுறவின் அடையாளமாக அமைந்தது. பேராக் சீக்கியர் சங்கத்தின் (Perak Sikh Union) தலைவர் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ குர்ஜீத் சிங் ராண்டே தனது வரவேற்புரையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் குருத்வாரா கிண்ணப் போட்டி மலேசிய சீக்கிய சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் நீண்டகால விளையாட்டு பாரம்பரியங்களில் ஒன்றாக திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

ஜூன் 3 முதல் 6 வரை நடைபெறும் இந்த விளையாட்டு விழா, விளையாட்டு போட்டிகளைத் தாண்டி ஒற்றுமை, நட்பு, ஒழுக்கம், பொறுமை மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் மேடையாக விளங்குகிறது என அவர் கூறினார். இந்த ஆண்டு ஹொக்கி, கால்பந்து, நெட்பால், பிக்கிள்பால், டார்ட்ஸ் மற்றும் பில் (Pool) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

பல போட்டிகள் பேராக் சீக்கியர் சங்கத்தின் கிளப் வளாகத்தில் நடைபெறுவது சங்கத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பிரதிபலிப்பதாக டத்தோ குர்ஜீத் சிங் தெரிவித்தார். மேலும், விழாவை வெற்றிகரமாக நடத்த அயராது உழைத்த ஏற்பாட்டுக் குழுவினர், நன்கொடையாளர்கள், ஆதரவாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் வெற்றியை மட்டுமின்றி விளையாட்டு நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் பரஸ்பர மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் நோர்சா ஜகாரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், பேராக் சீக்கியர் சங்கத்தின் புரவலர் டத்தோ டாக்டர் சுரிந்தர் சிங் சீமாவும் நிகழ்வில் பங்கேற்றார்.

இவ்விளையாட்டு விழா எதிர்கால தலைமுறைகளுக்கான விளையாட்டு மேம்பாடு, இளைஞர் வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமைக்கான முக்கிய தளமாக தொடர்ந்து திகழும் என்ற நம்பிக்கையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

(எஸ்.லிங்கேஸ்வரன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here