தீப்பிழம்புகளுக்குள் பாய்ந்த இராணுவ வீரர்! 8 பேரப்பிள்ளைகள் மற்றும் மகனை மீட்ட 66 வயது தாத்தா!

கோலாலம்பூர்:

ங்குள்ள ஜாலான் ஓயா லாமா, கம்பங் ஜெரியா அபாங் ரம்லியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில், தனது குடும்ப வீடே கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான நிலையிலும், தனது 8 பேரப்பிள்ளைகள் மற்றும் மகனின் உயிரைக் காப்பாற்ற 66 வயது முதியவர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாது தீக்குள் பாய்ந்துள்ளார்.

அந்த திக் திக் நிமிடங்களை நினைவு கூர்ந்த உமர் சிதீ (வயது 66) என்பவர் கூறுகையில், அவரும் அவரது மனைவியும் தங்களது இரண்டு அடுக்கு வீட்டிலிருந்து சுமார் ஆறு மீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகத் தெரிவித்தார். அந்த வீட்டில் 3 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 19 பேர் வசித்து வந்துள்ளனர்.

விபத்து நடந்த சமயத்தில், 4 முதல் 14 வயதுக்குட்பட்ட அவரது 8 பேரப்பிள்ளைகள் கீழ் தளத்தில் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது 20 வயது மதிக்கத்தக்க மகன் மேல் தளத்தில் இருந்துள்ளார்.

“திடீரென என் மனைவி வீடு தீப்பற்றி எரிவதாக அலறினார். அதே நேரத்தில் பயங்கர வெடி சத்தங்களும் கேட்டன. வீட்டின் பின்பகுதியில் இருந்து தீ வேகமாகப் பரவுவதைக் கண்டவுடன், நான் உடனடியாக வீட்டிற்குள் ஓடிச் சென்று கீழ் தளத்தில் இருந்த அனைத்து பேரப்பிள்ளைகளையும் வெளியேற்றினேன். பின்னர், மாடிக்கு விரைந்து சென்று தூங்கிக் கொண்டிருந்த என் மகனையும் எழுப்பி மீட்டேன்.”

ஓய்வுபெற்ற இராணுவ வீரரான உமர், வீடு முழுவதும் அடர்ந்த புகையும் கடுமையான வெப்பமும் சூழ்ந்திருந்த போதிலும், வீட்டிற்குள் யாரும் சிக்கவில்லை என்பதை உறுதி செய்த பிறகே தாம் வெளியேறியதாகக் குறிப்பிட்டார். “எனக்கு வயதாகிவிட்டாலும், அந்த நொடியில் என் பேரப்பிள்ளைகள் மற்றும் மகனின் பாதுகாப்பு மட்டுமே என் மனதில் இருந்தது. நல்லவேளையாக அனைவரும் பத்திரமாக தப்பினர்,” என்றார் அவர்.

உமரும் சில கிராம மக்களும் சேர்ந்து வாளிகளில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீ மிக வேகமாக பரவியதால் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமை ஆபத்தாக இருந்ததால் அனைவரையும் தள்ளி இருக்குமாறு அறிவுறுத்தினர். குடும்பத்தினர் கண் முன்னே அவர்களது வீடு தீக்கிரையானது.

இந்த விபத்து உமரின் குடும்பத்திற்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இந்த வீட்டை உமர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சிறுகச் சிறுகச் சேமித்து கட்டியுள்ளார். 1995-இல் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இதன் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, பின்னர் 2003 முதல் பொதுப்பணித்துறையில் (PWD) பணிபுரிந்தபடியே வீட்டை விரிவுபடுத்தியுள்ளார்.

“பிள்ளைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணமாகி தனித்தனி குடும்பங்களான போது வீட்டைப் படிப்படியாகப் பெரிதாக்கினேன். பேரப்பிள்ளைகள் பிறந்ததும் மேலும் விரிவுபடுத்தினேன். கடந்த ஆண்டுதான் இந்த வீட்டின் ஒட்டுமொத்தப் பணிகளும் முழுமையாக முடிவடைந்தன. ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் சாம்பலாகிவிட்டது,” என்று அவர் வேதனையுடன் கூறினார்.

முக்கியமான ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் எதையும் காப்பாற்ற முடியாமல் போனாலும், உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாததால் இந்த துயரத்தை அமைதியாக ஏற்றுக்கொள்வதாக உமர் கூறினார். “பொருட்களை நாம் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் இழந்துபோன உயிர்களை மீட்க முடியாது. என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே எனக்கு முக்கியம்,” என்றார் அவர்.

நேற்று காலை 11 மணியளவில் நடந்த இந்த பயங்கர தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதால், அந்த குடும்பத்தினர் உடுத்திய துணிகளுடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here