தாய்லாந்து பள்ளிக்கு வெளியே சாலையோர வெடிகுண்டு வெடிப்பில் இரு போலீஸ் அதிகாரிகள் உட்பட மூவர் காயம்.

கோலாலம்பூர்:

தாய்லாந்தின் யாலா (Yala) மாகாணத்தில் உள்ள பான் புலாய் (Ban Pulai) பள்ளிக்கு வெளியே நேற்று காலை நடத்தப்பட்ட சாலையோர வெடிகுண்டுத் தாக்குதலில் இரு போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ராமன் (Raman) மாவட்டத்தில் உள்ள இப்பள்ளியின் முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது காலை 8.35 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூடுதல் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை முழுமையாகச் சூழ்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆதாரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்தத் தாக்குதலானது தென் எல்லைப் பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், பாதுகாப்பைக் குலைக்கவும் நடத்தப்பட்ட ஒரு முயற்சி என்று பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here