உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக தொடங்கியது

23ஆவது உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி மெக்சிகோ சிட்டியில் நேற்று (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்றன. அதிக அணிகள் களம் காணும் உலகப் போட்டி இதுதான். அவை 12 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் 3ஆவது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகளும் என 32 அணிகள் 2ஆவது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறும். அதில் இருந்து 16 அணிகள் 3ஆவது சுற்றை (ரவுண்ட் 16) எட்டும். தொடர்ந்து கால்இறுதி, அரைஇறுதி என யுத்தம் நீண்டு, கடைசியில் ஜூலை 19ஆம் தேதி நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.

’நம்பர் ஒன்’ அணியான பிரான்ஸ், நடப்புச் சாம்பியன் அர்ஜெண்டினா, 2ஆம் நிலை அணியான ஸ்பெய்ன், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளன. உலகக் கோப்பையை அதிக முறை வென்ற பெருமைக்குரிய பிரேசில் அணி (5 முறை) மீண்டும் எழுச்சி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. மெக்சிகோ சிட்டியில் நடக்கும் தொடக்க போட்டியில் (உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணி, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவும் தென்ஆப்பிரிக்காவும் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன. இதே பிரிவில் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி) நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் தென்கொரியா- செக்குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6.240 கோடியாகும். முந்தைய உலகக்கோப்பையுடன் ஒப்பிடும் போது இது 50 விழுக்காடு அதிகமாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி ரூ.476 கோடியை பரிசுத்தொகையாக அள்ளும். 2ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.314 கோடி கிடைக்கும். 3ஆவது, 4ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் முறையே ரூ.276 கோடி, ரூ.257 கோடி வீதம் பெறும். லீக் சுற்றோடு வெளியேறும் அதாவது 32ஆவது முதல் 48ஆவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.86 கோடி அளிக்கப்படும். அத்துடன் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வோர் அணிகளுக்கும் போட்டி கட்டணமாக தலா ரூ.14.5 கோடி வழங்கப்படும்.

இதுவரை சாம்பியன்கள் யார்..யார்..?

1930-உருகுவே, 1934-இத்தாலி, 1938-இத்தாலி, 1950-உருகுவே, 1954-மேற்கு ஜெர்மனி, 1958-பிரேசில், 1962-பிரேசில், 1966-இங்கிலாந்து, 1970-பிரேசில், 1974-மேற்கு ஜெர்மனி, 1978-அர்ஜெண்டினா, 1982-இத்தாலி, 1986-அர்ஜெண்டினா, 1990-மேற்கு ஜெர்மனி, 1994-பிரேசில், 1998-பிரான்ஸ், 2002-பிரேசில், 2006-இத்தாலி, 2010-ஸ்பெய்ன், 2014-ஜெர்மனி, 2018-பிரான்ஸ் 2022-அர்ஜெண்டினா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here