அடுத்த பொதுத் தேர்தல் (GE16) வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அம்னோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வஜ்தி துசுகி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி, எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒத்துழைக்க அம்னோ தயாராக உள்ளது என்றும் அஷ்ரஃப் கூறினார். எந்தவொரு ஒத்துழைப்பும் நேர்மை மற்றும் நம்பிக்கை ஆகிய கொள்கைகளில் வேரூன்றியிருக்க வேண்டும் என்று இன்றிரவு நடைபெற்ற அம்னோ உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் உட்பட, எந்தவொரு தேர்தலிலும் தனது நிலைப்பாட்டையும் திசையையும் தானே தீர்மானிக்கும் உரிமை அம்னோவுக்கு உண்டு என்றும் அஷ்ரஃப் வலியுறுத்தினார்.கூட்டாட்சி அளவில் ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே ஜோகூர் அரசாங்கம் அமைக்கப்பட்டது என்றும், அதில் பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே, கூட்டாட்சி மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் எந்த மாநில அரசையும் கட்டுப்படுத்தாது,” என்று அவர் கூறினார். ஜோகூரில் தனது ஆணையைப் பாதுகாப்பதற்கான அம்னோவின் முடிவு, கூட்டாட்சிக் கூட்டணிக்குச் செய்த துரோகம் என்று சில தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அஸ்ராஃப் நிராகரித்தார். மாறாக, அதனை “ஒரு சட்டபூர்வமான, முதிர்ச்சியான மற்றும் அரசியலமைப்புக்குட்பட்ட ஜனநாயகச் செயல்” என்று அவர் விவரித்தார்.
ஜோகூர் மாநில சட்டமன்றம் ஜூன் 1-ஆம் தேதியும், நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூன் 5-ஆம் தேதியும் கலைக்கப்பட்டு, மாநிலத் தேர்தல்களுக்கு வழிவகை செய்யப்பட்டது. நெகிரி செம்பிலானைப் பொறுத்தவரை, 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசார் அமினுதீன் ஹரூன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவரது நிர்வாகத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதாகவும் அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சட்டமன்றக் கலைப்பு நிகழ்ந்தது.



















