நாட்டில் தலைதூர பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இன்டர்நெட், டிஜிட்டல் திறன் வசதிகளை செய்துக் கொடுத்திருப்பதற்காக மலேசியா உலக மேடையில் அங்கிகரிக்கப்பட்டிருக்கிறது. மடானி அரசாங்கத்தின் இந்த வெற்றி மலேசியர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தந்திருக்கிறது.
நாடி NADI எனப்படும் தேசிய தகவல் பரப்புதல் மையத்தின் திட்டம் மலலேசியாவுக்கு உலக அளவிலான 2025 WSIS எனப்படும் 2025 உலக தகவல் சமூகத்தின் உச்ச நிலை மாநாடு விருதை பெற்றிருப்பது தகவல் தொழில்நுட்ப துறையில் மலேசியா அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு கிடைத்திருக்கும் ஓர் உயரிய அங்கீகாரம் என்று சமூக ஆய்வாளர் டாக்டர் ஜி.மணிமாறன் கூறினார்.
சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நடைபெற்ற 2025 உலக தகவல் சமூகத்தின் தகவல் பரப்புதல் உச்சநிலை மாநாட்டில் நாடி டிஜிட்டல் திட்டத்திற்கு உலக விருது அறிவிக்கப்பட்டது. மடானி அரசாங்கத்தின் சார்பில் தொடர்புத் துறை அமைச்சு இந்த பெருமைக்குரிய விருதை பெற்றுக்கொண்டார்.
பூலாவ் பாங்க்கி Pulau Banggi நாடி திட்டம் ஐக்கிய நாட்டு (ஐநா) சபையின் திறன் மேம்பாடு பிரிவு 4 இல் மலேசியா இந்த விருதை வென்றது என்று அவர் சொன்னார்.
மலேசியாவின் மிகச் சிறிய தீவுகளில் இந்த Pulau Banggi – யும் ஒன்று. ஆனால் அதிவேக இன்டர்நெட் வசதி, தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது. இந்த இரண்டிலும் இத்தீவு மக்கள் பின்தள்ளப்பட்டுவிடக் கூடாது, விடுபட்டுவிடக் கூடாது என்ற தூர நோக்குச் சிந்தனையில் அரசாங்கம் இதனை செய்து முடித்திருக்கிறது என்று மணிமாறன் சொன்னார்.
Pulau Banggi – இல் வசிக்கும் இளைஞர், பெண்கள், தொழில் முனைவோர் சமூகம் டிஜிட்டல் திறன் பெற்று டிஜிட்டல் பொருளாதாரத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பது மடானி அரசாங்கத்தின் குறிப்பாக தொடர்புத் துறை அமைச்சின் உன்னத நோக்கத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது. இத்திட்டம் சபா, சரவாக் உட்பட நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தவிர WSIS இன்னொரு பிரிவிலும் மலேசியா Projek Stingray ll Pulau Ketam திட்டம் வழி மேலும் ஒரு விருதை வென்றிருப்பது தகவல் தொழில்நுடப் துறையில் மலேசியா கண்டிருக்கும் அதீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல், தகவல் தொழில் நுட்ப துறையில் மலேசியா அடைந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சி உலக அரங்கில் பிரபலமாகி இருப்பது மலேசிய மக்களுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
தொழில்நுட்பத்துடன் மக்களை இணைக்கும் முயற்சியில் மலேசியா வெற்றி பெற்றிருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் மட்டுமே இது சாத்தியம் என்பதை இந்த மகத்தான வெற்றியின் மூலம் மலேசியா தகர்த்திருக்கிறது என்று டாக்டர் மணிமாறன் கூறினார்.
அதேசமயம் வெறும் சுலோகத்தை மட்டும் மடானி அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. உண்மை நிலையில் மக்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இந்த தகவல் மய தொழில்நுட்பங்களிலிருந்து மக்கள் விடுபடமாட்டார்கள் என்பதை மடானி அரசாங்கம் உலக நாடுகளுக்கு நிரூபித்திருக்கிறது. புறநகர் பகுதிகளும் டிஜிட்டல் ஆளுமையில் இருந்து விடுபடாது என்பதில் மடானி அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் உறுதியான நிலைப்பாட்டையும் காண முடிகிறது என்று டாக்டர் மணிமாறன் சொன்னார்.
தொழில்நுட்பம் மட்டும் அன்றி மனித நேயம், மக்களின் எதிர்கால திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.
நாடு முழுவதும் 1,099 நாடி NADI மையங்களை கொண்டிருப்பதற்கு மடானி அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளது.




















