அலோர் ஸ்டார் பாலம் அருகே அடுத்தடுத்து இரு சடலங்கள் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!

கோலாலம்பூர்:

கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள ஜெராகான் வாட்டர்ஃபிரண்ட் (Jeragan Waterfront) பாலம் அருகே உள்ள கெடா ஆற்றில் இருந்து, 16 மற்றும் 46 வயதுடைய இரு ஆண்களின் சடலங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரும் போலீசாரும் இன்று மீட்டெடுத்துள்ளனர்.

இன்று காலை 8:45 மணியளவில், ஆற்றில் மிதந்து வந்த குப்பைகளுக்கு இடையே சடலம் ஒன்று சிக்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மண்டலம் 1-இன் தலைவர் அகமட் அமினுடின் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

“அலோர் ஸ்டார் மற்றும் ஜாலான் ராஜா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றுப் புதர்ககளுக்கு இடையே ஒரு ஆடவரின் சடலம் சிக்கியிருந்ததைக் கண்டறிந்து மீட்டனர்,” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காலை 10:16 மணியளவில், முதல் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மற்றொரு சடலம் மிதப்பது குறித்து பொதுமக்களிடமிருந்து தீயணைப்புத் துறைக்கு இரண்டாவது புகார் கிடைத்துள்ளது.

போலீசாரின் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அந்த இரண்டாவது சடலத்தையும் ஆற்றிலிருந்து பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை இன்று காலை 11:45 மணியளவில் நிறைவடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here