புக்கிட் துங்குலில் ஏறி வழிதவறிய 4 பெண்கள்: பத்திரமாக மீட்டது சிலாங்கூர் தீயணைப்புத் துறை!

கோலாலம்பூர்:

டெங்கிலில் உள்ள புக்கிட் துங்குல் (Bukit Tunggul) மலைப்பகுதியில் ஏறி, வழிதவறி தவித்த நான்கு பெண்கள் தீயணைப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர்.

இன்று காலை 10:13 மணியளவில், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அந்தப் பெண்கள் குழுவினர் திசை தெரியாமல் வழிதவறிவிட்டதாக அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் செயல்பாட்டு உதவி இயக்குனர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

“வழிதவறிய 25 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த நான்கு பெண்களுடன் தீயணைப்புத் துறையினர் தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் தீயணைப்பு வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை,” என்று அகமட் முக்லிஸ் கூறினார்.

தகவல் கிடைத்ததும் டெங்கில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் காலை 10:50 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மலையேறிகளைத் தேடும் பணியில் உடனடியாக இறங்கினர்.

செயல்பாட்டுத் தளபதி முகமது சகிரின் செலாமட் தலைமையில் 6 பணியாளர்கள் ஈடுபட்ட இந்த மீட்பு நடவடிக்கை, காலை 11:30 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. மீட்கப்பட்ட நான்கு பெண்களின் ஆரோக்கிய நிலையும் சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்டது; அவர்களுக்கு மேல் சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here