(கோகி கருணாநிதி)
ஸ்கூடாய்:
ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காஸி நேற்று துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு முதல்முறையாக அதிகாரப்பூர்வ வருகை தந்து ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், பள்ளியின் பல்வேறு தேவைகளுக்கும் உடனடி தீர்வுகளை அறிவித்து மகிழ்ச்சி அளித்தார்.

மலேசியாவில் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக விளங்கும் இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், ஜோகூரை 2030ஆம் ஆண்டுக்குள் முன்னேறிய மாநிலமாக மாற்றும் இலக்கை மாநில அரசு உறுதியாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
“ஜோகூரின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் செல்கிறது. பல பில்லியன் ரிங்கிட் முதலீடுகள் மாநிலத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றன. மாநில வருமானம் ஆண்டுதோறும் சுமார் 30 விழுக்காடு உயர்ந்து வருகிறது. அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களும், உள்ளூராட்சி மன்றங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் வருமானம் அதிகரிக்கும் போது அதன் பயன் மக்களிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது அரசின் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.

அதேவேளை, “இந்தியர், மலாய், சீனர், பூர்வகுடியினர் என நாம் அனைவரும் ‘பங்சா ஜோகூர்’ என்ற ஒரே அடையாளத்தின் கீழ் பெருமையுடன் வாழ்கிறோம். ஒற்றுமையாக இருக்கும் போது தான் ஜோகூர் மிகவும் வலிமையான மாநிலமாகத் திகழ்கிறது. பிளவுபட்ட உலகில் நாம் குடும்பமாக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்திற்காகவே மாநில அரசு நேற்று பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது,” என்றார்.
தற்போது 12 வயதாக இருக்கும் மாணவர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வியை முடித்து வேலைவாய்ப்பிற்குள் நுழையும் போது, ஜோகூரிலேயே உயர்ந்த தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நீங்கள் கோலாலம்பூர், மலாக்கா அல்லது சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி ஜோகூரிலேயே வேலை செய்து மாநில வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும். அதற்காக நாங்கள் நேற்று அடித்தளத்தை அமைத்து வருகிறோம். மாணவர்கள் கடினமாகப் படிக்க வேண்டும்; ஆசிரியர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.
ஆசிரியர்களின் நலனுக்கும் மாநில அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து தேசியப் பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர் அறைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த மாநில அரசு உதவி வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில், பள்ளியின் பல்நோக்கு விளையாட்டு மைதானத்திற்குக் கூரை அமைத்துத் தருமாறு மாணவர் ஒருவர் மந்திரி பெசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பதிலளித்த அவர், மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தால், அப்பகுதிக்கான கூரை அமைக்கும் பணியை நிச்சயமாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
இதனிடையே, பள்ளித் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, பள்ளியின் நீண்டகால நிலுவை பயன்பாட்டுக் கட்டணங்கள் புதிய மண்டபத் தேவையை மந்திரி பெசாரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
அதற்குப் பதிலளித்த மந்திரி பெசார், பள்ளியின் சுமார் 5,000 ரிங்கிட் நிலுவை நீர்க்கட்டணத்தில் 20 விழுக்காடு தள்ளுபடியை எஸ்.ஏ.ஜே. வழங்கும் என்றும், 2 இலட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் மின்கட்டண நிலுவையில் 50 விழுக்காடு தள்ளுபடியைத் தேசிய மின்சார நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தள்ளுபடிகளுக்குப் பின்னர் மீதமிருக்கும் சுமார் 1 இலட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட் தொகையை ஜோகூர் மாநில அரசு முழுமையாக ஏற்றுச் செலுத்தும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு நிகழ்வில் கலந்து
கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பள்ளிக்கான புதிய மண்டபம் அமைக்கும் கோரிக்கையையும் மாநில அரசு பரிசீலிக்கும் என அவர் உறுதியளித்தார்.
நிகழ்வின் உணர்வுப்பூர்வமான தருணமாக, பள்ளி மாணவர் ஒருவர் மலாய் கவிதை ஒன்றை இனிமையாகப் பாடி அனைவரையும் கவர்ந்தார். மாணவரின் குரலால் நெகிழ்ந்த மந்திரி பெசார், அவரை அன்போடு அணைத்துக் கொண்டு பாராட்டிய காட்சி நிகழ்வில் கலந்துகொண்டோரின் மனதை நெகிழச் செய்தது.
இந்நிகழ்வில் மாநில பொறுப்பு பாரம்பரியம், ஒற்றுமை கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார், முன்னாள் ஸ்குடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம், ம.இ.கா. ஜோகூர் மாநில துணைத் தலைவர் டத்தோ நிலா ராஜா, ஜோகூர் மாநில கல்வித் துறை இயக்குநர் ஸுல்கர்னைன், ஜோகூர் மாவட்ட கல்வி அதிகாரி இரா.ரவிசந்திரன்மக்கள் சக்தி ஜோகூர் தலைவர் டத்தோ சுகுமாரன், பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.




















