கோலாலம்பூர்:
2025-ஆம் ஆண்டு STPM தேர்வில் மிகச்சிறந்த தகுதி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு, அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பிற்கான அரசுப் பல்கலைக்கழக கல்வி உதவித்தொகை (Scholarship) முழுமையாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆறாம் படிவ (Form 6) கல்வி வரலாற்றிலேயே இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.
நேற்று நடைபெற்ற STPM தேர்வு முடிவுகள் வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆறாம் படிவ மாணவர்களின் அசாத்திய கல்வித் திறனையும் உழைப்பையும் அங்கீகரித்து ஊக்குவிப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றார்.
மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், அலோர் ஸ்டார் மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகளில் புதிய ஆறாம் படிவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாடு முழுமையுமுள்ள மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றுள் 18 கல்லூரிகள், மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நவீன ‘ஸ்மார்ட் போர்ட்’ (Smart Board) வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.





















