20,000 ரிங்கிட் வரையிலான தேக்குன் கடன்களுக்கு 24 மணி நேரத்தில் ஒப்புதல்: புதிய டிஜிட்டல் தளமும் அறிமுகம்!

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் தங்களின் செயல்பாட்டு மூலதனத்தை (Operating Capital) எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகப் பெறுவதற்காக, ‘தேக்குன் நேஷனல்’ (TEKUN Nasional) அமைப்பின் கீழ் புதிய அதிரடிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 20,000 ரிங்கிட்டிற்கு உட்பட்ட கடனுதவிகளை விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற ‘மலேசிய வணிக மேம்பாட்டுத் திருவிழாவின்’ நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், இந்த அதிவேக கடன் ஒப்புதலுக்கான முன்னோடித் திட்டம் (Pilot Project) தற்போது தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் இது அதிகாரப்பூர்வமாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் மயமாகும் தேக்குன்:

தொழில்முனைவோர் இனி தங்களின் கடன் விபரங்களை எளிதாக அறிந்துகொள்ளவும், வீட்டிலிருந்தபடியே இணையம் வாயிலாக விண்ணப்பிக்கவும் ஏதுவாக ‘தேக்குன் நேஷனல் போர்டல்’ (TEKUN Nasional Portal) என்ற புதிய டிஜிட்டல் தளமும் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில், ‘பவர்அப் டென்கே’ (PowerUp 10K) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறு நிறுவனங்களுக்கு மொத்தம் 1.5 பில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த மே 31 நிலவரப்படி மலாக்காவில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்கு 92 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here