சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வியால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில், நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெகவுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து சமரசம் ஏற்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் திரும்பினர்.
எனினும், சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இவ்வாறாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு அரங்கேறி வரும் நிலையில்,இன்று சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும் போது எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் வெளிநடப்பு செய்யவில்லை இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் இரு பிரிவாக செயல்படுவது தெரியவந்துள்ளது.








