சொந்த மக்களை கொன்ற மியான்மர் ராணுவம்; ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

மியான்மரில் தேர்தல் நடத்தப்படும் என கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மர் ராணுவம் அறிவித்திருந்தது. அன்று முதல், வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சம் 702 பேர் வரை கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில்,

மியான்மரில் தேர்தல் நடைபெற்ற 6 மாத காலத்தில், தனது ஆட்சிப் பிடியை வலுப்படுத்தவும், கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றவும் அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில், 700க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்; உயிரிழந்தவர்களில் 224 பெண்களும், 153 குழந்தைகளும் அடங்குவர். இத்தகைய அழிவுக்கும் துயரத்திற்கும் ஜெட் போர் விமானங்கள், டிரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் முக்கிய காரணம் ஆகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதிலளித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ரவீனா ஷம்தாசனி, “702 பேர் கொல்லப்பட்டதற்கு மியான்மர் ராணுவமே பொறுப்பு. இந்தக் கணக்குகள் எங்களுக்குக் கிடைத்த நம்பத்தகுந்த தரவுகள் மட்டுமே. இது முழுமையான புள்ளிவிவரம் அல்ல” என்று தெரிவித்தார்.

மியான்மரில் 2021 ஆம் ஆண்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ததால் உள்நாட்டுப் போர் மூண்டது. அங்கு நடைபெற்ற 10 ஆண்டுகால ஜனநாயக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம், ஆங் சான் சூசியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது.

அதன் பின்னர், 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. பின்னர், ராணுவ ஆட்சிக்குழுவின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ராணுவத்தின் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் எளிதாக வெற்றிபெற்றன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் மின் ஆங் லாயிங்-ஐ அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். ராணுவ ஆட்சியை தலைமையேற்று நடத்திய அவரே அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here