“போக்குவரத்து அபராதங்களைத் தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும்” – நாடாளுமன்றத்தில் ஷாஹிதான் காசிம் யோசனை!

கோலாலம்பூர்:

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் தனிநபர்களின் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டம் மற்றும் அபராதத் தொகையைத் (Traffic fines) தவணை முறையில் (Instalment) செலுத்துவதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிதான் காசிம் யோசனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்கள் அவையில் (Dewan Rakyat) இன்று நடைபெற்ற 2026 சாலைப் போக்குவரத்து (திருத்த) மசோதா மீதான விவாதத்தின் போது, ஆராவ் (Arau) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிதான் காசிம் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இத்தகைய நெகிழ்வுத்தன்மை கொண்ட முறைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் ஃபின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகளின் மாதிரிகளை மலேசியா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

“நாம் ஃபின்லாந்து நாட்டின் முறையைப் பரிசீலிக்கலாம்; அங்குப் பொதுமக்கள் தங்களின் அபராதத் தொகையைத் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல், சுவீடன் நாட்டில் ஒரு தனிநபரின் நிதித் திறனுக்கு ஏற்ப அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. மலேசியாவிலும் இத்தகைய முறைகளைப் புகுத்துவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.”

முன்னதாக, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை 300 ரிங்கிட்டிலிருந்து 500 ரிங்கிட்டாக (RM500) உயர்த்த வழிவகை செய்யும் இந்த புதிய சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், இந்த புதிய அபராத வீதம் உடனடியாக அமலுக்கு வராமல், வரும் 2029-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் ஓட்டுநர் நடத்தையில் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்த நீண்ட கால அவகாசம் (Transition Period) வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய ஷாஹிதான் காசிம், மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதில் மலேசியா, சிங்கப்பூர் நாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலேசியாவில் தற்போது மரணத்தை விளைவிக்கும் இக்குற்றத்திற்கு 50,000 ரிங்கிட் முதல் 1,00,000 ரிங்கிட் வரை அபராதமும், 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

“சிங்கப்பூரில் மீண்டும் மீண்டும் இக்குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 8 முதல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், 100,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் 300,000 ரிங்கிட்) வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மலேசியாவில் அபராதத் தொகை குறைவாக இருப்பதால் தான் சிங்கப்பூரர்கள் இங்கும் வந்து விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here